Description
எனது உரை
தமிழ்மொழியில் சிறுவர்களுக்கான தரமான நூல்கள் இல்லை என்பது பொதுவான கருத்து. மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கம் அருகி வருகிறது என்பது இன்னொரு கூற்று. இன்றைய கல்வி அமைப்பு வினாவுக்கு விடையளிக்கும் போக்குடையது, தேடல் அற்றது என்பது சிலரின் கருத்து. எது எப்படி இருப்பினும் ஆசிரியர்கள் மனம் வைத்தால் மாணவர்களைத் தேடலில் ஈடுபடுத்தலாம். வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கலாம் என்பது கல்விமான்களின் கணிப்பு.
என்னைப் பல மாணவர்கள் பேட்டிகாண வந்தனர். அவர்களது வினாக்கள் பிரமிக்க வைத்தன. அவர்களைத் தேடலில் ஈடுபடுத்திய ஆசிரியர்களை மனதில் பாராட்டிக் கொண்டேன். சிறந்த வழிகாட்டல் கிடைக்குமாயின் நம் மாணவ சமுதாயம் விழித்தெழுந்துவிடும்.
படிக்கும்போது வாசிக்கும் பழக்கத்தையும் எனது ஆசிரியர்கள் ஏற்படுத்தினார்கள். தேவதைக் கதை களைக் (Fairy Tales) காட்டி ஆர்வத்தைத் தூண்டினர். சிவானந்த வித்தியாலயத்தின் அதிபராக இருந்த திரு. க. கணபதிப்பிள்ளை, தாவரவியல், விலங்கியல் பாடங்களைக் கற்பித்த திரு. பி. எஸ். சாக்கோ, பண்டிதர் சந்திரசேகரம், வித்துவான் வி. சி. கந்தையா ஆகியோரை இப்போதும் நினைவு கூருகிறேன். வாசிக்கவும், எழுதவும் தூண்டிய இப்பெருமக்கள் எனது வழிகாட்டிகள்.
திருகோணமலை மாவட்டத்தில் அந்நியர் ஆட்சியின்போது விட்டுச் சென்ற சில தடயங்களையும், இயற்கைத் துறைமுகத்தைச் சூழ்ந்துள்ள நகர், கிராமங்களையும் பின்னணியாகக் கொண்டு அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றுமுள்ளவர்களையும் கதை மாந்தர்களாக உலாவரச் செய்து இக்கதையை எழுதியுள்ளேன். மாணவர்களது உள்ளத்தில் நல்லனவற்றைக் கூறவேண்டும் என்பதற்காக, இன ஒற்றுமையையும், மனதில் உறுதியையும் வலியுறுத்தியுள்ளேன்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் நாள் என்று எமது நாட்டில் தோன்று கின்றதோ அன்றுதான் நமது நாட்டுக்குச் சுதந்திரம், அதுவரை அனர்த்தங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும். இளம் தலைமுறையினர் சிந்திப்பதற்காகவே இந்நூல் எழுதப்பட்டது.
ஆலங்கேணி ச. அருளானந்தம்






Reviews
There are no reviews yet.