Description
புகுமுகவுரை
நான் அரிவரி என்னும் அன்றையக் கல்வி முறையில் கற்றுக் கொண்டிருந்த வேளையில் எனக்கு ஆடிப்பாடி கற்பித்த ஆசிரியர்களை மதிக்கிறேன். பொருள் தெரியாதவிடத்திலும் அவர்கள் கற்பித்த முறை என்னைக் கவர்ந்தது. சிறப்பாக ‘குண்டுடிக்கி குடுகிடுக்கி கூடை கையில் ஏந்தி குனிந்து நின்று பழம்பொறுக்கும் குறத்தி ஏடி அம்மே’ என்று எனது ஆசிரியர் ஆடிப்பாடி அபிநயத்தோடு கற்பித்த பாங்கும், அவரோடு சேர்ந்து ஆடிப்பாடியதும் இன்றும் என் மனக்கண்முன் நிழலாடுகிறது.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றும், ஆத்திசூடியைப் பாடமாக்கவும் சொல்லித்தந்த அந்த ஆசிரியப் பெருந்தகைகளை இன்றும் என்மனம் போற்றுகிறது.
அறஞ்செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டுண்
ஒப்புரவு ஒழுகு.
ஓதுவது ஒழியேல்.
ஒளவியம் பேசேல்
அஃகம் சுருக்கேல்
எனக்கு அப்போது அவற்றின் பொருள் தெரியாது. ஆனால் பெரியவனாகியதும் அவற்றின் பொருளை விளங்கிக் கொண்டேன். நமது இலக்கிய வரலாற்றைப் படிக்கும்போது கிராமியப் பாடல்களும். தாலாட்டு, விளையாட்டுப் பாடல்களும் என்னைக் கவர்ந்தன. அவர்களைப் போன்று நானும் ஆசிரியராக வந்து கற்பிக்க வேண்டும் என்ற பேராசையை மனதில் வளர்த்துக் கொண்டேன்.
எனது கிராமப் பாடசாலையில் ஐந்தாம் தரம் சித்தியடைந்ததும் அப்பாடசாலையை விட்டு நீங்கி ஆங்கிலக் கல்வி கற்கச் சேர்க்கப்பட்டேன். ஆங்கிலப் பாடசாலையில் மூன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். பாடங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் நடந்தன. திணறிவிட்டேன். எனினும் எனது ஆசிரியர்களின் உந்துதலால் உசாரடைந்தேன். அதனால் விருப்புடன் வகுப்பு மாணவர்களோடு சேர்ந்து ஓடினேன். ஆசிரியர்கள், கொள்வோன் கொள்வகை அறிந்து மனதிருக்குப்படி கற்பித்தர்கள்.’Nursery Rhymes’ கற்பிக்கும்போதும்,’Fairy tales’ என்ற ‘Nursery Stories’ கற்பிக்கும்போதும் அந்த ஆசிரியர்கள் கற்பித்தல் முறையில் காட்டிய ஆர்வம் என்னைப் பெரிதும் கவர்ந்தன. எனக்கு அவை பின்னர் பெருந்தீனியாகின. ஆங்கிலப் பாடசாலையில் ஆங்கிலப் பாடத்துக்காக எனக்கொரு பரிசு கிடைத்தது. ‘Alice in Wonderland’ என்ற நூல் பரிசாகக் கிடைத்தது. அந்நூலினை Louis Carroll எழுதியிருந்தார். அது சிறுவர்களுக்கான அருமையான நூலாகும்.
எனது ஆசிரியர்கள் Nursery Rhymes பலவற்றைக் கற்பித்தார்கள். சில பாடல்களைப் புரிந்து கற்றோம். அன்று கற்றுக்கொண்ட
‘Little drops of water
Little grains of sand
Make the mighty ocean
And the pleasant land’
‘Twinkle Twinkle little star
How I wonder what you are
Up above the world so high
Like a diamond in the sky’
இவ்வாறான பல பாடல்களை பல முறைகளில் பாடிக் காட்டி எங்களை மெய்சிலிர்க்க வைத்த ஆசிரிய திலகங்களை மனதிருத்திக் கொள்வேன். ‘ருவிங்கிள் ருவிங்கிள்’ என்ற பாடலை கர்நாடக இசையிலும் பாடி அசத்தினார்கள். பல புரியாதுவிட்டன. மேல்வகுப்பு கற்கும்போது அவற்றின் பொருள் விளங்கியது.
எல்லா மொழிகளிலும் தாலாட்டுப் பாடல்களும், விளையாட்டுப் பாடல்களும் உண்டு. மொழிதான் மனித நாகரிகத்துக்கு வித்திட்டது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.
பின்னர் ஆசிரியராகிக் கிராமப்புறப் பாடசாலைகளில் கற்பிக்க அனுப்பப்பட்டேன். ஆசிரியர்கள் கீழ் வகுப்புக்களில் கற்பிப்பதில் ஆர்வம் காட்டப் பின்னிழுத்தார்கள். ஆனால் நான் கீழ்வகுப்புக்களில் விரும்பிச் சென்று கற்பித்தேன். ஆடலும் பாடலும் அபிநயத்தலும் எனது வகுப்புக்களில் தொனிப் பொருளாக இருக்கும். பாடங்களை முன்னாயத்தம் செய்து பாடல்களாகவும், கதைகளாகவும், நாடகங் களாகவும், விளையாட்டுக்களாகவும் தயாரித்துப் பிள்ளைகளுக்குக் கற்பித்தேன். அவர்களைச் சிற்றில் கட்டி அதில் விளையாட்டு அடுக்களைகளைச் செய்யவிட்டுச் சமைக்கும்படி செய்வேன். விளையாட்டு பிள்ளைகளைக் கவர்வன.
ஒவ்வொரு விடயத்துக்கும் பொருத்தமான பாடல்களைக் கிராமிய இசையில் பாடி ஆடச்செய்தேன். பாடசாலைகக்கு வராதிருந்த பிள்ளைகளும் வரத் தொடங்கினார்கள். நான் எப்போது வகுப்பினுள் நுழைவேன் என்று பிள்ளைகள் காத்திருப்பார்கள். மாணவ மன்றங்களை இயங்க வைத்து அனைவரையும் பங்கு கொள்ளச் செய்தேன்.
நானாகவே பாடல்களையும், கதைகளையும், நாடகங்களையும் எழுதி கற்பித்தேன்.ஆசிரியர் சேவையே அற்புதமானதும் மனநிறைவைத் தருவதுமாகும். அதனாலேயே ஆசிரிய சேவையை விரும்பி ஏற்றேன். இவ்வாறுதான் சிறுவர் இலக்கியம் என்னுள் புகுந்தது. சிறுவர் இலக்கியத்துக்கு முன்னோடிகளாக நமது ஆன்றோர்களே சிறப்பாகத் தாய்மார்களே இருந்துள்ளனர்.
அவர்களைத் தொடர்ந்து நாம் வாழும் சூழலும், அங்கு வாழும் சமூகமும்தான். இதனைத் தொடர்ந்து வீடும், சமூக நிறுனங்களும், பின் நண்பர்கள் என இது விரிந்து செல்லும்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்குக் குழந்தை உளவியல், கற்பித்தல் முறையியல், கல்வித் தத்துவம், மொழி, கணிதம், ஒருங்கிணைந்த கற்றல் போன்ற விடயங்களை முன்பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்பித்தேன்.
நான் கல்வி நிர்வாக சேவைக்கு பரீட்சை மூலம் தெரிவாகிக் கல்வி அதிகாரியாக வவுனியாவிலும் பின்னர் திருகோணமலையில் மாகாணக் அமைச்சின் மாகாணக் கல்வித் திணைக்களத்தில் மேலதிகக் கல்விப் பணிப்பாளராகச் சேவைசெய்து வந்தேன்.
வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சில் செயலாளராக இருந்த திரு.சுந்தரம் திவகலாலா முன்பள்ளி அபிவிருத்திக்காக 1997ல் ஒரு அலகினைத் திறக்க முன்வந்தார். வடகிழக்கு மாகாணத்தில் முன்பள்ளிகளைப் பதிந்தும், தரமான பாடத்திட்டத்தை உருவாக்கவும், ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கவும் என அந்த அலகு செயற்பட்டது. அதற்குப் பொறுப்பாக என்னைப் பணிப்பாளராக நியமித்தார்.
எனது ஆரம்பக் கல்விச் செயற்திட்டங்களையும், சிறுவர் இலக்கியங்களில் உள்ள பரீட்சையங்களையும், முன்பள்ளிக் கல்வியில் கொண்ட ஈடுபாட்டையும் அறிந்து முன்பள்ளி அலகினை என்னிடம் ஒப்படைத்தார். அதனை நன்கு உணர்ந்து செயற்பட்டேன். அத்துடன் சிறுவர் இலக்கியத்திலும் கவனம் செலுத்தினேன். இன்று சிறுவருக்காகப் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். சிறுவர்களுக்காக எழுதுவது ஒரு வரம் என்றே கருதுகிறேன். முன்பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வளவாளராகவும் வழிகாட்டியாகவும் சேவையாற்றுகிறேன். அதனால் சிறுவர் இலக்கியம் பற்றிய சிந்தனை பொறியாக மூளையில் தட்டியது.
நண்பர் கலாநிதி செ.யோகராசா அவர்கள்’கவிஞர் கருணை யோகன்’ என்னும் புனைபெயர் மூலம் இலக்கிய உலகில் காலடி பதித்தவர். நாங்கள் சிந்தாமணி ஊடாக இலக்கிய உலகினுக்கு அறிமுகமானவர்கள். அவர் இன்று இலக்கிய ஆய்வாளனாக, கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக அரிய சேவைகள் செய்துவருபவர். சிறுவர் இலக்கியத்தில் அதீத கரிசனையுடையவர். அவர்’ஈழத்தில் சிறுவர் இலக்கியம்’ பற்றிய ஓரு நூலை எழுதும்படி அன்புக் கட்டளையிட்டார். அதனையிட்டுச் சிந்தத்துக் கொண்டிருந்த போது ஒரு தீவிபத்தில் சிக்கினேன். நான் மருத்துவ மனையில் இருந்தேன். “நீ விசா இல்லாமல் யமலோகம் வரப்பார்க்கிறாய். யமலோகத்துக்கு நீ லாயக்கில்லை” என்று யமதர்மன் திருப்பி அனுப்பி விட்டான். வந்து விட்டேன். தீயும் என்னுடலைத் தீய்க்கவில்லை. ஒவ்வொன்றும் ஏதோ காரணம் கருதியே நடக்குமாம். அப்படியென்றால் நான் உயிர் பிழைத்ததும் ஒரு காரணம் கருதியா?
இந்த நூலை எழுதி முடிகிக வேண்டும் உடல் நலம் குன்றிவிட்டதால் எழுதவது பெரும் சிரமமாக இருந்தது. எனினும் எனது கனவு இப்பிறவியில் நூறு நூல்களையாவது எழுதி முடிக்க வேண்டும் என்பதே.அதன் விளைவும், தேடலுமே இந்நூலாகும். இந்நூலுக்கான தேடல்களைப் பல நூல்கில் இருந்து பெற்றுக் கொண்டேன்.
நான் தேடிய கருப்பொருட்களை இந்நூலில் கண்டுகொண்டால் நான் நன்றி தெரிவிப்பது மானசீகமாகப் புரியும்.
நன்றியுடன் கேணிப்பித்தன் ச.அருளானந்தம்






Reviews
There are no reviews yet.