In Stock

சாதனையாளர்

220.00

ஆசிரியர் : அருளானந்தம்

Category:

Description

என்னுரை

சிறுவர்கள் யார்? என்ற வரையறைக்குள் நின்று கொண்டு கருவறை தொடக்கம் பதினெட்டு வயது வரையுள்ள ஆண்பெண் இருசாராரையும் கவனத்தில் கொண்டு இக்கதைகளை எழுதியுள்ளேன். ‘சிறுவர்’ என்ற சொல்லினைக் கல்வி உளவியலாளர்களின் பகுப்பாய்வின்படி பொதுவாக ஐந்து பிரிவுகளுக்குள் அடக்கி அறிஞர்கள் ஆராய்வதைக் காணலாம்.

(1) 00-02 குழந்தை முதலாவது பருவம்.
(2) 03 – 05 முன்பிள்ளை – இரண்டாவது பருவம்
(3) 05-10 மூன்றாம் பருவம் (4) 11 – 15 முன்குமரப் பருவம், நான்காம் பருவம்.
(5) 11-18 குமரப்பருவம் ஐந்தாம் பருவம்

இதனடிப்படையில் நோக்கும் போது சிறுவர் இலக்கியம் ஐந்து பருவங்களைக் கொண்டு அந்தந்த பருவத்தினருக்கு ஏற்ற வகையில் அமைந்திருத்தல் அவசியமாகும் என்பது புலனாகும். சரியாக இந்த வரையறையைப் புரியாதவர்கள் யாருக்காக எழுதுகிறோம் என்பதை மறந்துவிட்டு எழுதுகிறார்கள். நான் இந்நூலில் பருவங்களை அடிப்படையாக வைத்து இக்கதைகளை 11-18 வயதினருக்குப் பொருத்தமானதாக எழுதியுள்ளேன்.

இக்கதைகளில் கதைமாந்தர்கள்ளில் வரும் பாடசாலையில் கற்கும் மாணவர்கள். சிறப்பாக நான்காம் வகுப்புத் தொடக்கம் பதினொராம் வகுப்புக்களில் கற்கின்றவர்கள். அவர்களது உள்ளங்களில் நல்ல விதைகளைத் தூவிவிட வேண்டியது நமது கடமையாகும். ஐந்து கதைகளை இந்நூலில் சேர்த்துள்ளேன். மாணவர்களால் பலவற்றைச் சாதிக்கமுடியும். அவர்களிடம் தேங்கிக் கிடக்கும் ஆற்றல்களை வெளிக்கொண்டுவர வேண்டும். அதனைச் செய்திருக்கிறேன். இவ்வகைக் கதைகளைச் சிறுவர்கள் கட்டாயம் படிப்பார்கள். ஆனால் அவர்களை வாசிக்குமாறு தூண்டுவது ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும் கட்டாயக் கடமையாகும். நான் படிக்கும்போது எனது ஆசிரியர்கள் நிறையவே வாசிப்பதற்கு வழிப்படுத்தினார்கள். எனது அப்பா, அம்மா, ஆச்சி, தாத்தா, அக்கா தில்லையம்மா அனைவரும் கதைகளைச் சொன்னார்கள். இரவில் உறங்கப் போகும் நேரத்தில் கதைகள் எனது காதுகளில் மோதும். மனம் சிறகடித்துக் கற்பனையில் மூழ்கும்.
ஒரு தாய் கருவுற்ற காலத்திலிருந்து நல்ல கதைகளைக் கேட்கவேண்டும். தாலாட்டுப் பாடல்களைப் பாடிப் பிள்ளைகளை உறங்கச் செய்ய வேண்டும். அவர்களுக்குக் கதைகளையும் பாடல்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களைச் சிந்திக்க வைக்கவேண்டும். சிறுவயதில் மனதில் பதிவாகும் நல்ல கருக்கள் பெரியவர்களானதும் பயன்கொடுக்கும். சிறுவர் இலக்கியம் சிறுவர்களது உளநிலை, ஒழுக்கநிலை ஆளுமை என்பவற்றை வளர்த்தெடுக்கும் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களது வயதையும் கவனத்தில் கொண்டு உளவிருத்தியோடு, ஆளுமை விருத்தியையும் வளர்ச்சியடையச் செய்யும் விதத்தில் படைக்க வேண்டும்.

இன்று கணணிமயக் காலம் தொலைக்காட்சி சுகந்தருவனவாக இருந்தாலும், சிறுவர்களது கற்பனா சக்தியை வளர்க்க உதவுவதில்லை கண்ணால் பார்த்தும் காதால் கேட்டும் காற்றோடு விட்டுவிடுகிறார்கள். வாசிக்கும் போது, வாசிப்பவர் மனதினிலே பாத்திரங்களின் குணாதிசயங்கள், நெறிமுறைகள், குறிப்பிடப்படும் புலக்காட்சிகள் விரிந்து கொள்ளும், ஐம்புலனும் செயற்படுகின்றன. தான் வாசிக்கும்போது கற்பனையில் காணும் பாத்திரங்களின் தன்மையை உணர முடியும். இதனைக் கவனத்தில் கொண்டால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வாசிக்கும் பழக்கத்தில் ஈடுபடுத்துவார்கள்.

நல்ல விழுமியங்களை வளர்த்தெடுக்கும் வழியில் இக்கதைகளை எழுதியுள்ளேன். சிறார்கள் உள்ளத்தில் உறுதியும். பிறருக்கு உதவும் மனவளத்தையும் உடையவர்கள். கதாபாத்திரங்களைப் போல் தாங்களும் வரவேண்டும் என்று துடிப்பவர்கள். அவர்களை அவ்வழியில் செல்வதற்கு நெறிப்படுத்தும் வகையில் இக்கதைகளை எழுதியுள்ளேன். கதைகள் சிறுவர்களைக் குதூகலத்தில் ஆழ்த்திச் சிந்தனையை வளர்த்துச் சுடர்விடச் செய்யவேண்டும். சாதனையாளர்கள் புதிதாக எதையும் செய்வதில்லை. ஆனால் அவர்கள் செய்வதை வித்தியாசமான வழிகளில் செய்கிறார்கள் என்பது பேரறிஞர்களது கருத்தாகும்.

இக்கதைகளில் வருபவர்கள் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்கள். ஆறாம் வகுப்புத் தொடக்கம் உயர்தர வகுப்புக்கள்வரை கற்பவர்கள். அவர்களது உள்ளங்களில் நிறைந்துள்ள கருக்கள் பெரியவர்களின் ஆட்கொள்ளும். உள்ளங்களையும் சிறுவர்கள் பெரியவர்களைப் பின்பற்றிப் போலச் செய்து பார்ப்பதில் வல்லவர்கள். சில சமயங்களில் பெரியர்களினால் செய்யமுடியாத வேலைகளையும் செய்து விடும் திறன்படைத்தவர்கள். எப்போதும் பெரியவர்கள் சிறுவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்க வேண்டும். அப்போதுதான் சிறுவர்கள் நிறைவான பயனைப் பெறுவார்கள். அப்படி வழிகாட்டினால் நமது சமூகம் நல்ல பயனைப் பெறும்.

சிறுவர் இலக்கியங்களுக்குப் பரிசுகள் கொடுத்து ஊக்குவிப்பது மிகப்பாராட்டப்பட வேண்டிய தொன்றாகும்.

வாசிப்பதால் அறிவு அகண்டமாகிறது. ஆதலால் உங்கள் சிறார்களை வாசிக்கத் தூண்டுங்கள்.

கேணிப்பித்தன் ச.அருளானந்தம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “சாதனையாளர்”

Your email address will not be published. Required fields are marked *