Description
எனது உரை
இந்நூல் நாம் வாழும் உலகத்தைப் பற்றியது. அதனைச் சூழ்ந்துள்ள வானத்தின் அற்புதங்களைக் கூறுவது. வானத்தில் நாம் காண்பவையும், காணாதவை பற்றியும் சொல்வது. நான் படித்துச் சுவைத்து அறிந்தவற்றை நீங்களும் படித்துச் சுவைக்க வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். உங்கள் அனைவருக்கும் சுவையூட்டும் தகவல்களைத் தருகின்றேன். இந்தப் புதுமையான உலகத்தின் அற்புதங்களை நீங்கள் அறியவேண்டும். அவற்றை உங்கள் நண்பர்களுக்கும் கூறவேண்டும். அவர்களையும் வாசிக்கத் தூண்டவேண்டும். இந்த நூல்களை அனைவரும் வாசிக்கும்படி செய்வது உங்களது கடமையாகும்.
நமது சூழல் எவ்வளவு அழகானது. எத்தனையாயிரம் பொருட்களைக் கொண்டுள்ளது. அவை உயிருள்ளனவாகவும், இல்லாதனவாகவும் உள்ளன. இவற்றை நாம் தினந்தோறும் பார்க்கிறோம். ஆனால் அவைபற்றிச் சிந்திப்பதில்லை. வான்வெளி நீலமாகத் தெரிவதேன்? இரவில் ஒளிவிடும் நட்சத்திரங்கள் பகலில் எங்குபோய் ஓய்வெடுக்கின்றன. பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் மாறிமாறி வருவதேன்? சூரியன் தேய்வதில்லை. சந்திரன் தேய்ந்து வளர்வதேன்? வானத்தில் எத்தனையாயிரம் நட்சத்திரங்கள் உள்ளன. கிரகங்கள் எப்படிப்பட்டவை? அவற்றை வணங்குகின்ற மக்கள், அவற்றில் என்ன உள்ளன என்பவற்றுக் கெல்லாம் இந்நூல் விடை சொல்வதாக அமைந்துள்ளது. இவற்றைப் பற்றிய தேடலாக எழுந்ததுதான் இந்த நூல். ஒவ்வொரு நாட்டிலும். மொழியிலும் இவ்வாறான கதைகள் உண்டு.
அவற்றைப் பற்றி நீங்களும் அறியவேண்டும். அதற்காகவே இந்தக் கதைகளையும், செய்திகளையும் உங்களுக்குத் தருகிறேன். இவற்றில் உங்களுக்குத் தெரிந்தவைகளும் உண்டு. தெரியாதவைகளும் அடங்கும். வாசித்து மகிழ்வதற்காகவே எழுதியுள்ளேன். வாசிப்பதால் நமது அறிவு விரிவடையும் அல்லவா? தேடல் பிறக்கும்: நீங்களும் எழுதலாம். தேடி எழுதவேண்டும்.
ச.அருளானந்தம் (கேணிப்பித்தன்)






Reviews
There are no reviews yet.