Description
என்னுரை
இந்த நாவலை எழுதவேண்டும் என்று பல ஆண்டுகளாக முனைந்தேன். சந்தர்ப்பம் கிடைக்காது போயிற்று. இது கற்பனைகலந்த உண்மை இதில் வரும் கதாபாத்திரங்களில் பல உண்மையானவை. ‘நான் பெற்ற துன்பம் பெறாதிருக்க இவ்வையகம்’ என்பதற்காக இதனை எழுதத் துணிந்தேன். என்னுடன் 1983 தொடக்கம் 1991 வரை வவுனியாவில் வட்டாரக்கல்வி அதிகாரியாகக் கடமையாற்றிய திரு. செல்வராசா கணபதிப்பிள்ளை அவர்கள் இதனை நாவலாக எழுதும்படி வற்புறுத்தி இருந்தார். அவரது வேண்டுகோள் இந்த நாவல்மூலம் நிறைவேறுகிறது. அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதை நானறியேன்.
சம்பவங்கள் பல நிறைந்துள்ள இந்நாவலில் இன்பமும், துன்பமும், சமூக அவலங்களும் பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம். நாம் நல்லனவற்றைச் செய்தால் நன்மைதான் விளையும். சுடச்சுடத்தானே பொன் மிளிரும். அதைப்போன்றுதான், மனிதனுக்குத் துயரங்கள் வரும்போது அவற்றை நமக்கு வரும் சோதனைகளாக எடுத்துக் கொண்டால் வெற்றி காண்பது உறுதி. ‘சவாலே சமாளி’ என்பதுதான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். ‘காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்’ என்று ஏன்சொன்னார்களோ தெரியாது. சிலர் அதனைத் தங்களுக்குச் சாதகமாக்கி மக்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்துவதையே காண்கிறோம்.
இந்த நாவலில் வரும் நிகழ்வுகள் 1984 86 வரையான காலப்பகுதிக்குரியன. அக்காலப் பகுதிக்குள் நமது நாட்டுநிலையைச் சொல்வதாக இருந்தாலும் அதற்கு முன்னர் 1959-1976 வரையான காலப் பகுதிகளிலும், பின்னரும் நடந்தேறிய சில சம்பவங்களும் சுவையூட்டுவனவாக உள்ளன. நமது இளைஞர்களின் துயரங்களும் அதனால் அல்லலுற்ற பெற்றோரின் அவலங்களும் விபரிக்கப் படுகின்றன. இந்த நாவலூடாகச் சில வரலாற்றுப் பதிவுகளையும் சேர்த்துள்ளேன். நானில்லாத காலத்தில் எனக்குப் பின்வரும் சந்ததியினருக்காகச் சில தடயங்களைச் சொல்லிவைப்பது எனது கடமையென உணர்ந்ததால் அவ்வாறு செய்தேன். படித்து அறிந்து கொள்வது வாசகர்களாகிய உங்களது கடமையாகும். ‘நான் பட்ட துன்பம் பெறாதிருக்க இவ்வையகம்’. சிறப்பாகத் தமிழ் இளைஞர்கள் பெறாதிருக்கப் பிராத்திக்கின்றேன். ‘சேரசோழ பாண்டியர்கள் சேர்ந்தொன்றாய் வாழா’த தமிழினத்தில் ‘தமிழனுக்குத் தமிழனே எதிரி’ என்பதனையும் ‘தமிழர்கள் என்று ஒன்று படுவார்களோ அன்றுதான் தமிழினத்துக்கு விடிவுநாளாகும் என்பதனையும் உணர்ந்து செயற்படுங்கள். செயற்படுங்கள்.
கேணிப்பித்தன் ச.அருளானந்தம்






Reviews
There are no reviews yet.