Description
எனது உரை
சுவாமி விபுலானந்தரைப் பற்றிச் சிறுவருக்கு ஏற்ற வகையில் எழுத வேண்டும் என்ற அவா தொடர்ந்து கொண்டிருந்தது. சுவாமி விபுலானந்தரையும், ஈழத்திருநாட்டில் தமிழுக்காகத் தொண்டு செய்த அறிஞர் பெருமக்களையும் அறியச் செய்யவேண்டும் என்ற முயற்சியில் இந்தச் சிறு நூலினை எழுதமுனைந்தேன். சுவாமி விபுலானந்தரது அயரா முயற்சியினால் எழுந்த கல்விக்கூடமான சிவானந்த வித்தியாலயம் எனது கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.
ஆங்கிலம் போதனாமொழியாக இருந்தும், இந்துப்பாரம்பரியக் கல்விமுறை பேணப்பட்டது. அங்கு ஓரளவில் குருகுல முறையான கல்வி கிடைத்தது அதற்கு வித்திட்டவர்களாக சுவாமி விபுலானந்தரை அடியொற்றி வந்து அக்காலத்தில் கடமையாற்றிய இராமகிருஷ்ண மிசன் துறவிகளான சுவாமி. நடராஜானந்தா, சுவாமி. சர்வானந்தா, சுவாமி. ஜீவனாநந்தா போன்றவர்களும், அதிபர்கள் திரு . எஸ் .அம்பலவாணர், திரு.க.கணபதிப்பிள்ளை, அவர்களும், அவர்களைத் தொடர்ந்து வந்த அதிபர்களும், ஆசிரியர்களுமாவார்கள்.
நான் மாணவனாக இருந்த காலத்தை நினைந்து பேருவகை அடைவேன். இன்று சிவானந்த வித்தியாலய வளாகம் முற்றிலும் மாற்றமடைந்துள்ளது. நவீன வசதிகளைக் கொண்டு தேசியபாடசாலையாக மாறியுள்ளது. வவுனியாவில் பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்தபோது திரு.எஸ். நவரத்தினராசா கல்விப்பணிப்பாளராக இருந்தார். அவரோடு இணைந்து அறுபத்தைந்து புதிய பாடசாலைகளைத் திறந்தோம். அப்பாடசாலைகளுக்குத் தமிழ் வளர்த்த அறிஞர்களாகிய வீரமாமுனிவர், சுவாமி. ஞனப்பிரகாசர், போன்றோரது பெயர்களோடு. சுவாமி விபுலானந்தா, சுவாமி நடராஜானந்தா, சுவாமி சிவானந்தா, சுவாமி விவேகானந்தா போன்ற இராமகிருஷ்ண துறவிகளது பெயர்களையும் சூட்டினோம். அத்துடன் வவுனியாவில் விபுலானந்த நூற்றாண்டு விழாக்குழுவையும் உருவாக்கி, ‘உள்ளக்கமலம்’ எனும் நூற்றாண்டு விழா மலரையும் வெளியிட்டு, பல்கலைக்கழகம் சென்று படிக்கமுடியாத வறுமைக்கோட்டுக்குக் கீழ்வாழும் மாணவருக்குப் புலமைப் பரிசு வழங்குவதற்கான நிதியத்தையும் நிறுவினோம்.
கேணிப்பித்தன் -ச.அருளானந்தம்.






Reviews
There are no reviews yet.