In Stock

கும்பத்துமால்

200.00

ஆசிரியர் : அருளானந்தம்

Category:

Description

என்னுரை
‘அந்த ஆவணி ஆறு, ‘வம்மிப்பு’, ‘கேணிப்பித்தன் கதைகள்’, ‘ஏன் வந்தாய்? ஆகிய சிறுகதைத் தொகுதிகளை ஏற்கனவே வெளியிட்டேன். இச்சிறுகதைத் தொகுப்பு எனது ஐந்தாவது தொகுதியாகும்.. இத்தொகுப்பில் அடங்கியுள்ள அதிகமான அ கதைகள் பரிசுகளைப் பெற்றவை. எல்லாரும் எழுதுவதுபோலன்றி எனது கதைகளை ஆழமாகப் படிப்பவர்கள் நமது ஈழத்தமிழர்களின் அவலங்களைக் கண்டு கொள்வார்கள், உண்மை வரலாறு எவ்வாறு திரிபுற்றுள்ளது என்பதை அறிந்து கொள்வார்கள். இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் ஈழத்தமிழர்களது வராலாற்றை எவ்வாறு மாற்றுகிறார்கள் என்பதைத் தெளிந்து கொள்வார்கள். எனது சிறுவர் இலக்கியங்களிலும் இதனைப் பதிவு செய்து வருகிறேன்.

எனது கதைகளில் ‘பிரபல மேதாவிலாசங்கள்’ குறிப்பிடுவதுபோன்ற அம்சங்கள் இல்லாதிருக்கலாம். வருங்காலத்தில் தமிழர்களது வரலாற்றைத் தேடுகின்ற ஆர்வலர்களுக்கு எனது பதிவுகள் அவசியம் உறுதுணையாக இருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. அதனால் கதைகளில் அவற்றைத் இழையோட விடுகிறேன். நமது இளைய சமூகத்தினர் எங்கேயோ விலகிப் போய்க்கொண்டிருக்கின்றனர். ஒரு காலத்தில் ‘இலங்கையில் தமிழர்கள் வந்தான் வரத்தான்கள்’ என்ற நிலை தோன்றலாம். பெரும்பான்மை இனத்தவர்களில் பலர் இதனை நம்பிவருகிறார்கள். ஆனால் ‘ஈழத்தமிழர்களும் இலங்கையின் மைந்தர்களே’ என வாதிடும் சிங்கள் மக்களும் இல்லாமலில்லை. சரியாக மகாவம்சம் போன்ற நூல்களைப் படிப்பவர்களுக்குச் சிங்களவரும், தமிழர்களும் ஆதிக்குடிகள் என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.

‘ஈழத்தமிழர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்தான்’ என்பதை ஆங்காங்கே எனது கதைகளில் காணலாம். இயக்கரும் நாகரும் இந்த மண்ணின் பழங்குடியினர் என்றால் ‘அவர்களின் வம்சாவழியினர்தான் நாங்கள்’ என்பதை எந்த வரலாற்று ஆசிரியர்களும் துணிந்து எழுதுகிறார்கள் இல்லை. இலங்கையின் எந்தக் கோயில்களின் வரலாற்றைப் பார்த்தாலும் இந்தியாவில் இருந்து வந்த மன்னன் குடியேற்றியதாகத்தான் எழுதியிருக்கிறார்கள். அப்படி எழுதுவதால் தமக்குப் பெருமை என எண்ணியிருப்பார்கள் போல் தெரிகிறது. இவர்களுக்கு உண்மையில் அக்கோயில்களின் வரலாறு தெரியாது என்றே கூறவேண்டும். கோணேசர் கோயில் மட்டும் இராவணனோடு தொடர்பு பட்டதாய் இருக்கிறது. உண்மையான வரலாற்றைத் தெரிந்து எழுதவேண்டும்.

ஈழத்துச் சிறுகதை வரலாற்றை ஆய்வு செய்கின்றவர்களும் நுனிப்புல்லையே மேய்கின்றனர். தமக்குத் தெரிந்த சிலரை மட்டும் அல்லது யாரும் எழுதிவைத்த குறிப்புக்களை மட்டும் மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள். புதிய தேடல்களைச் செய்வதில்லை. ஒரு சில பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் தாங்கள் படித்த களையே காணக்கூடியதாகவுள் தமது மாணவர்களுக்குக் கொடுப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. அம்மாணவர்களும் புதிய தேடல்களைச் செய்யாது தமது விரிவுரையாளர் கொடுத்த ‘சரக்கையே தங்கள் சரக்காக்கி’ பத்திரிகைகளிலும் மேடைகளிலும் எழுதியும், வாசித்தும் வருகிறார்கள். இந்நிலை மாறவேண்டும். எத்தனையோ புதிய புதிய சிறந்த எழுத்தாளர்கள் இன்று ஈழத்தில் எழுதுகிறார்கள். அவர்களை இனங்கண்டு உற்சாகப் படுத்தவேண்டும். ஈழத்தவர்களின் ஆக்கங்களை முதன்மைப்படுத்த வேண்டும்.

எடுத்ததற்கெல்லாம் தமிழகத்து எழுத்தாளர்களது கதைகளை மேற்கோள் காட்டுகிறார்கள். புதுமைப்பித்தன், கு.ப.ரா எனப்பட்டியல் படுத்துகிறார்கள். நமது நாட்டு எழுத்தாளர்களது கதைகளை ஏறெடுத்தும் பார்க்கிறார்கள் இல்லை. ஹைக்கூக் கவிதையாக அற்புதமாகச் சிறுகதை எழுதும் நமது நாட்டு வேல் அமுதன் என்றொரு எழுதாளனின் கதைகளை யாராவது படித்தார்களா? அவற்றைப் பற்றிச் சிந்திக்கிறார்களா? இலங்கையின் பிரபல சிற்றிதழ்கள் அவரது கதைகளைத் தாங்கி வெளிவருகின்றன. அற்புதமான இலக்கியக் கனதியைக் கொண்டுள்ளதைக் காணலாம்.

நமது கலை, கலாச்சாரங்கள் மறைந்துபோவதையும் சுட்டி அவற்றை எனது கதைகளில் நினைவு படுத்துகிறேன். பழைய சம்பிரதாயங்களைச் சொல்லுவதினூடாக நமது சமுதாயத்தில் நிலவிய நல்ல அம்சங்களை நினைவுபடுத்தி வருகிறேன். நமது முதுகைத் தடவிக் கொண்டே நமக்குத் துரோகம் இழைக்கும் கூட்டத்தையும் சுட்டியிருக்கிறேன் கண்டுகொள்பவர்கள் கண்டுகொள்வார்கள். இந்த மண்ணின் மைந்தர்களாக மாறி, தமிழ் மக்களை ஏமாற்றும் இன்றைய அரசியல்வாதிகளையும், சந்தர்ப்பவாதிகளையும், ஓணான்போல் மாறும் கூட்டத்தினரையும் எனது கதைகள் சுட்டிநிற்கும்.

எடுத்துக்காட்டாக கும்பத்துமால், சொந்தமண்ணின் அகதி, ஆத்மவிஜயம், வரலாற்றை மாற்றிய காதல், மதுராஞ்சலி, ஆனந்தரின் துள்ளல் போன்ற கதைகளைப் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். ஒவ்வொரு கதையிலும் சொல்லவேண்டிய முக்கிய ‘விதை’ இருக்கும். இவை பலருக்குப் புரியாது. அதனால் எனது கதைகள் அவர்களுக்கு ஏதோபோல் இருக்கும். நான் உயிருடன் இருக்கும்போது சிலவற்றைப் பதிவு செய்து வைக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததால் எழுதி வைக்கிறேன். இந்நூல் உருவாக்கத்துக்குப் பலர் பின்னணியில் உள்ளனர். இக்கதைகளைப் பிரசுரித்த வீரகேசரி, தினக்குரல், தினகரன், ஞானம், செங்கதிர் போன்ற பத்திரிகைகளின் ஆசிரிய பீடத்தினருக்கு எனது நன்றி.

‘போல’ எழுதுவதில் எனக்கு நாட்டமில்லை. நான் சுயமாக இருக்கவே விரும்புகிறேன். ஏனெனில் மற்றவர்போல் எழுதினால் அது பிரதிபண்ணலாகும். அது நமக்குத் தேவைதானா? இத்தொகுப்பில் உள்ள கதைகளைப் படித்துப் பாருங்கள். இக் கதைகளில் உலாவரும் கதாமாந்தர்கள் உங்களோடு கூடவே உலா வருபவர்களாகவே இருப்பார்கள். உங்கள் வாழ்வில் நடந்தவைகளாகவே இருக்கும். வாசித்துப் பாருங்கள்.

கேணிப்பித்தன் ச.அருளானந்தம்,

Reviews

There are no reviews yet.

Be the first to review “கும்பத்துமால்”

Your email address will not be published. Required fields are marked *